நண்பர்கள் தினத்தில் ஒரு திருவிழா !
வலையுலகில் தமிழ் பதிவர்களின் வழி தனி வழிதான். அனைத்துப் பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் திரட்டிகள் ஆயிரம் பதிவர்களையும் ஒரு குடும்பத்தினராக அடையாளம் ஏற்படுத்தின. முன்பின் அறியாதவரும் பதிவர் என்று அறிமுகமானால் ஏதோ பலகாலம் பழகியவர் போன்று அளவளாவுதல் இயல்பாக போயிற்று. பதிவர்கள் சந்திப்பு போண்டாவிலும் போட்டோ பகிர்விலும் ஆரம்பித்து இன்று தமிழ்ப்பதிவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக முன்னேறியுள்ளது. மே மாத கோவை பதிவர் பட்டறை நுட்பங்களையும் சமூக அக்கறையையும் பகிரும் சந்திப்பாக அமைந்து வருங்காலத்திற்கு முன்னோட்டம் விட்டது.
அதையொட்டி ஆகஸ்ட் 5 இல் சென்னையில் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தமிழில் வலைபதிவோருக்கும் புதிதாய் பதிய விரும்புவோருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை ஒருங்கிணைக்கும் குழுவினரின் சுறுசுறுப்பும் ஆர்வமும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.
சென்னையிலுள்ளவர்களும் சென்னைக்கு செல்கின்றவர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வாகும். நண்பர்கள் தினத்தில் நட்பு வட்டத்தை பெரிதாக்க நல்ல வாய்ப்பு, தவற விடாதீர்கள். மும்பையிலிருந்து கொண்டு என்னால் பெருமூச்சுதான் விட முடிகிறது. இளைஞர்கள் நடத்தும் இத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
பட்டறையின் குறிக்கோள்கள்:
* வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
* பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
* புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
* பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
* பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
நாள்: 05 ஆகஸ்ட் 2007
நேரம்: 09.30-17.30
இடம்: தமிழ்த் துறை அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா கடற்கரை வளாகம். திருவள்ளுவர் சிலை எதிரில்
பேருந்து நிறுத்தம்: கண்ணகி சிலை நிறுத்தம். பேருந்துகள்: 21G, 21L, 21P, 21E, 21H, 21K, PP21, PP19, 6D, 6E, 6A, 2A
மிக அண்மையிலுள்ள தொடர்வண்டி நிலையம்: திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம், பல்கலைக்கழக மெரினா வளாகத்துக்கு பின்னாலேயே திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம் உள்ளது. தொடர்பு கொள்ள: தமிழ் வலைபதிவர் பட்டறை